அத்தியாயம் -1
ஆதி அந்தமில்லாத கால வெள்ளத்தில் வினாடிக்கு பல நூற்றாண்டு வீதம் கடந்து நம் வாலிப வீரன் நீந்தி 2021ம் ஆண்டில் காலடி எடுத்து வைப்பதாக கற்பனை செய்து நம் நவீன பொன்னியின் செல்வன் கதை களத்திற்கு நேயர்களை அழைக்கிறோம்.
தொண்டை நாடு எங்கே திருமுனைப்பாடி எங்கே தில்லை சிற்றம்பலம் எங்கே என தெரியாதவாறு கண்ணுக்கெட்டிய தூரம் வரை காடாய் இருந்த நிலங்கள் நாடாய் மாறி அங்கொன்றும் இங்கொன்றுமாய் மரங்கள் இருந்த தார் சாலையில் எப்போது எந்த வண்டி எந்த வேகத்தில் யாரை இகலோகத்திலிருந்து பரலோகம் காண்பிக்கும் என்பதறியாது மக்களும் மாக்களும் தவித்து சாலையை கடக்க திண்டாடி ஏரி குளம் காயாமல் கண்ணில் பட்டால் அதை ரசித்து மரத்தில் நிழல் இளைப்பாற கிடைக்குமா என ஏங்கி வாழையடி வாழையாக நம் முன்னோர்கள் நமக்கு ஆற்றிய அத்தனை நற்செயல்களையும் தொலைத்து நிற்கும் சமுதாயத்தில் அல்லவா நுழைந்து விட்டோம்.
வீர நாராயண ஏரி இன்று வீராணம் ஆகி அதிலும் அத்தி பூத்தார் போல் தண்ணீர் நிறைவதை காணவா இவ்வளவு ஆவல் கொண்டு கால பயணம் செய்து கழனி காண வந்தோம் என்பது போல் சோர்வாயிருந்தது நம் வாலிப வீரனுக்கு. அது மட்டுமா உழவும் விரை தெளிவும் நடந்த இடங்கள் எல்லாம் இன்று பலவும் பகீர் நடத்தைகளும் கொண்ட மக்கள் திரிவதை கண்டு சற்றே கலக்கமுற்றான். நீள அகலமும் எழுபத்தி நான்கு கணவாய்களும் என எண்ணி திளைத்த ஏரி எப்போது தண்ணீர் வந்து சிறிது தாகம் தீர்க்கலாம் என வாடி பார்க்கும் பார்வை அவன் மனதை பிசைந்தது.
இதற்காகவா நம் சேர சோழ பாண்டிய பல்லவ மன்னர்களும் மக்களும் பார்த்து பார்த்து நாடு செழிப்படைய நகரம் செழிப்படைய உழைத்தார்கள் என எண்ணி சோர்ந்து அயர்ந்து ஊர்ந்து போய் கொண்டிருந்தது நம் வீணர் குல மாறன் மந்தியமாதனின் மாருதி 800 வாகனம்.
அன்று தேர்தல் தெரிவு நாள் என்பதால் அனைவரும் காலையில் இருந்தே காணொளி வாயிலாக களம் கண்டவர்களை கணித்து கொண்டிருக்க அங்கொன்றும் இங்கொன்றுமாக சாலையில் வாகனங்கள் சென்று கொண்டிருந்தது. கோடையின் கோர தாண்டவம் மட்டுமின்றி கண்ணில் கண்ட முதியவர் ஒருவர் கொரோனா எனும் கொடிய அரக்கன் வேறு உலாவி கொண்டிருப்பதாக எச்சரிக்கை செய்து விட்டு சென்றார்.
மந்தியமாதனின் கண்கள் அளவிலா அயர்ச்சி கொண்டு எப்படிப்பட்ட சமூகத்தை எவ்வாறு மாற்றியுள்ளனர் இந்த வீணாய் போன மாந்தர்கள் என நெக்குருகி நெகிழ்ச்சி அடைந்து கொரோனவை கொன்று விட்டு தான் மறு வேலை என்று மார் தட்ட துடித்தது.
ஆனாலும் அந்த வயதான பெரியவர் கொரோனாவின் கோர தாண்டவ கூறுகளை எடுத்து கூறியது நினைவிற்கு வந்து தான் வந்த வேலையை தொடங்க முகக்கவசம், வழலைக் கட்டி மற்றும் இடைவெளி ஆகியவை கடைப்பிடிக்க வேண்டும் என்பதையும் தான் உடல் நலம் மிக்கவன் எனினும் உள்ள நலன் பெருக்க தன் ஆசான் கூறிய அவசிய வார்த்தைகளை எண்ணி அமைதி காக்க தீர்மானித்து கொண்டான்.
கருத்தாக்கம் : என் மனைவியின் பொன்னியின் செல்வன் புதினத்தின் ஈர்ப்பும் நவீன யுகத்தில் அந்த கதைக்களம் கடந்தால் எவ்வாறு போகும் என விவாதித்ததின் தாக்கம் என் மனதில் உதித்த இந்த கருத்தாக்கம்.
No comments:
Post a Comment